×

தமிழ்நாட்டில் இதுவரை 2,500 போலி பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் மூர்த்தி பேட்டி

மதுரை: தமிழ்நாட்டில் இதுவரை 2,500 போலி பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி முன்னிட்டு மதுரை மாவட்டம் செட்டிக்குளத்திலும், சக்கிமங்கலத்திலும் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கினார். அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்த மருத்துவ முகாம்களில் அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள், மருந்துகள் வழங்கப்படும். தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திர எழுத்தாளர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அவர்களது பணி வெளியிலேயே முடிந்து விடுகிறது. பொதுமக்களே நேரடியாக வந்து பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக தான் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. பத்திரப்பதிவு செய்ய வரும் யாரும் பணம் கொண்டுவர வேண்டாம். ஆன்லைன் மூலமாகவே செலுத்திக் கொள்ளலாம்.

பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் பதிவு செய்பவர்களை தவிர யாரும் வரக்கூடாது. குறிப்பாக இடைத்தரகர்களுக்கு இடமில்லை. பத்திரப்பதிவுத்துறை மென்பொருள் 3.0 ஆறு மாதங்களில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். 50 லட்சம் மதிப்பிற்கு மேலான சொத்துக்கள் பதிவு செய்யவும், கள ஆய்வு செய்யவும் அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். போலி பத்திரப்பதிவு ரத்து சட்டத்தின்படி 2,500 பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 14,000 மனுக்களும் பெறப்பட்டுள்ளன. மனுக்கள் மீது ஆய்வு செய்யப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு போலி பத்திரங்கள் ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

The post தமிழ்நாட்டில் இதுவரை 2,500 போலி பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் மூர்த்தி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Murthy ,Madurai ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...